×

அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த விபத்தில், பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 பணியாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கியவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற மிகப்பெரிய பாலம் ஒன்று உள்ளது. நேற்று காலை சிங்கப்பூர் கொடியுடன் டாலி என்ற பெயரிலான சரக்கு கப்பல் பால்டிமோர் வழியாக இலங்கையின் கொழும்பு நகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2.6 கி.மீட்டர் நீளம் கொண்ட பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பால்டிமோர் நகர தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் பாலத்தில் சென்று கொண்டு இருந்த ஏராளமான கார்கள் படப்ஸ்கோ ஆற்றுக்குள் விழுந்தன. பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் ஆற்றில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஷ்மோர் நகரத் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாலத்தின் மீது மோதிய வேகத்தில் கப்பல் தீப்பிடித்து நீரில் மூழ்கியது. இந்நிலையில் இந்த விபத்தின்போது சாலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 பணியாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நீரில் மூழ்கியவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. சாலை பராமரிப்பு பணியில் 8 பேர் ஈடுபட்டிருந்த நிலையில் இருவர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 6 பேர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

The post அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : United States ,Washington ,Maryland ,America ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் நடந்து வரும்...